மாநில கிரிக்கெட் சங்க தேர்தல்: உச்ச நீதிமன்றம் தடை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வரைவு அரசமைப்பு விதிகளை இறுதி செய்யும் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும் வரையில், மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

லோதா கமிட்டி சிபாரிசுகளின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016–ம் ஆண்டில் உத்தரவிட்டது. லோதா கமிட்டி சிபாரிசுகளில் இடம் பெற்ற ‘ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டு.

நிர்வாகிகளுக்கான வயது உச்ச வரம்பு, ஒருவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத வகையில் பதவிக்கான கால இடைவெளி கட்டாயம் விடப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட சில சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களது கருத்துகளை கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தன.  இதில் சில அம்சங்களை பரிசீலனை செய்வதாக கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை உருவாக்க தங்களது கருத்துகளை, கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தில் உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் மூலம் மனுவாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்து இருந்தது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நிலையில், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எந்தவொரு மனுவையும் உயர் நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், “ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை’, “பிசிசிஐ அதிகாரிகள் இருவேறு பதவிகளை வகிப்பதற்கு இடையேயான இளைப்பாறும் காலம்’ ஆகிய விவகாரங்களில் முன்பு பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்வதை கருத்தில் கொண்டுள்ளதாகவும் நீதிபதிகள் அமர்வு கூறியது.

Editor:

This website uses cookies.