ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது ஆறாவது ஐபிஎல் சதத்தை அடித்தார் விராட் கோலி. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதன் விவரங்களை ஒன்றன்பின் மற்றொன்றாக கீழே பார்ப்போம்.
1. ஒரே போட்டியில் இரண்டு சதங்கள்
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடித்தது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. ஒரே போட்டியில் எதிரெதிர் அணியின் வீரர்கள் சதம் அடித்தது இதுவே முதல்முறையாகும். ஹைதராபாத் அணிக்கு கிளாசன் 104(51) ரன்கள் விளாசினார். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 100(62) ரன்கள் அடித்தார்.
2. அதிக ஐபிஎல் சதங்கள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த சதம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் ஆறாவது சதம் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆறு சதங்களுடன் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த கிரிஷ் கெயில் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.
3. அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் – ஒரு சீசனில்!
இந்த சீசன் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 872 ரன்கள் அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில், ஒரு சீசனில் இதுவரை ஓபனிங் வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்த அதிக ரன்கள் இதுவாகும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், 2016 ஐபிஎல் சீசனில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் இருவரும் சேர்ந்து 939 ரன்கள் அடித்தனர். இதுவே ஒரு சீசனில் இரண்டு வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சேர்த்த அதிக ரன்களாக இருக்கிறது.
4. சேஸிங் மாஸ்டர் விராட் கோலி!
சேசிங் மாஸ்டராக இருந்து வரும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றிலும் சேசிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆர்சிபி அணி 185+ ரன்கள் சேசிங் செய்த போட்டியில் விராட் கோலியின் சராசரி 32 ஆகும். 35 இன்னிங்ஸில் ஐந்து அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். இதுவே இந்திய டி20 கிரிக்கெட்டில், சேஸிங்கில் விராட் கோலி சராசரி 50+ ஆகும்.