ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி முடிவுற்ற பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதிய 2வது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டும் முடிவுற்ற பிறகு ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
பேட்டிங் தரவரிசையை பொருத்தவரை, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுச்சானே முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறி தற்போது 3வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணியை பொறுத்தவரை, ரோகித் சர்மா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடித்து வருகிறார். கேப்டன் விராட் கோலி ஏழாவது இடத்தில் இருந்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை. இதனால் இரண்டு இடங்கள் பின்தங்கி 740 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அதிக நாட்கள் முதல் இடத்தில் இதற்கு முன்னதாக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கைல் ஜேமிஷன் 8 இடங்கள் முன்னேறி இருக்கிறார். இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்த இவர் அபாரமாக விளையாடினார். இதனால் தரவரிசை பட்டியலில் இருபத்தி ஆறாவது இடத்திற்கு வந்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது சதமடித்த வங்கதேச வீரர் லின்டன் தாஸ் தரவரிசை பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மற்றொரு வங்கதேச வீரர் எபாட் ஹுசைன், முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேறி தற்போது 88வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தாகூர் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறார். முதல் 10 இடங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.