மும்பையை 162ல் கட்டுப்படுத்தியதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம்: ஸ்டீவன் ஸ்மித்

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. ராஜஸ்தான் அணிக்கு ரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டி காக் 65 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 34, ஹர்திக் பாண்ட்யா 10 ரன்கள் எடுத்தனர். கோபால் இரண்டு விக்கெட் சாய்த்தார்.

இதனையடுத்து 162 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரகானே 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ஸ்மித், சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சாம்சன் 19 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

 

குறிப்பாக 17 வயதே ஆன ரியன் பராக் நம்பிக்கையளிக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே, ஒரு கட்டத்துக்கு பிறகு விக்கெட்டை பாதுகாத்து விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 41-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார்.

இதனால், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற எளிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த ரியன் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய டர்னரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் பூம்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் குறைவு மற்றும் நல்ல நிலையில் உள்ள கேப்டன் ஸ்மித் களத்தில் இருந்ததால் ராஜஸ்தான் அணிக்கு பெரிய அளவிலான நெருக்கடி இல்லை.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய முதல் பந்திலேயே பின்னி பவுண்டரி அடித்து வெற்றி பெறச் செய்தார்.

இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 48 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்.

 

10 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி தன்னுடைய 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.