“என்னுடைய கேப்டன் பொறுப்பில் நான் இதை அனுமதித்திருக்க மாட்டேன். இப்படி வெற்றி பெறுவது முறையற்றது.” என்று ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை சர்ச்சையான முறையில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியதற்கு கருத்து தெரிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.
போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனவுடன் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை துரத்தியபோது பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள், பென் டக்கட் 83 ரன்கள் அடித்து போராடினர். மற்ற வீரர்கள் எவரும் பங்களிப்பை கொடுக்காததால் 327 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த போது பேர்ஸ்டோவ் மற்றும் பென்ஸ் ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் இருந்தனர். இவர்களின் பாட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதை உடைத்துவிட்டால் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து விடும் என்று ஆஸ்திரேலியா அணி போராடியது. அந்த நேரத்தில் பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்தார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு போட்டி முடிந்த பிறகு கருத்து தெரிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். “ஆஸ்திரேலியா அணியினர் ரன் அவுட் செய்த பிறகு களத்தில் இருந்த நடுவரை பார்த்து நான் கேட்டபோது அவர் இல்லை என்று தலையசைத்தார். அதன் பிறகு வழக்கம்போல மூன்றாவது நடுவரிடம் முடிவுகள் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவுட் என வந்தது எனக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது.
களத்தில் இருந்த நடுவர் நியாயமான போட்டி மனப்பான்மையுடன் முடிவுகளை கொடுத்தார். ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் மாறிவிடக்கூடாது என்று நடந்துகொண்டார். ஆனால் மூன்றாம் நடுவர் விதிமுறைகளுக்கு உட்பட்டு கொடுத்தார்.
நான் பந்துவீச்சு அணியின் கேப்டனாக இருந்திருந்தால் களத்தில் இருந்த நடுவர்களிடம் இது நியாயமான முறையில் வருகிறதா? என்று முறையிட்டு இருப்பேன். ஆஸ்திரேலியா அணிக வெற்றி பெறுவதற்கு இந்த விக்கெட் முக்கியம் என்பதால் அவர்கள் எந்த எல்லைக்கும் சென்றிருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியான வகிழியில் வெற்றியை பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.” என்றார்.