உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டு விளையாடுவதால், இந்தத் தொடர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக நகர்கிறது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணிகள் எவை என்பதை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.
வாஷிங்டன்னில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சையிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, இந்தியாவும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதும் என தான் நினைப்பதாக கூறினார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி ஜூன் 30-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படம் எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுந்தர் பிச்சை, தோனி பந்து வீச்சாளர்களை ஊக்குவிக்க கூறும் ‘மிகச் சிறப்பு’ என பொருள்படும் ‘பஹூத் பாதியா’ என்ற வாக்கியத்தை பயன்படுத்தி பதில் அளித்தார். மேலும் உங்களுடன் சேர்ந்து விளையாட்டை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்