இந்திய அணிக்கு நெ.4 கிடைத்துவிட்டார்! இவருக்காவது அதிக வாய்ப்பு கொடுங்கள்! கவாஸ்கர் அறிவுரை!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 68 பந்தில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய 8 ஒருநாள் போட்டிகளில் மூன்றாவது அரைசதத்தை நிறைவு செய்து, இந்திய அணியை 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுக்க உதவினார். ஸ்ரேயாஸ் ஐயருடன் ஆடிய கேப்டன் விராட் கோலி, தன்னுடைய 42வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்த கவாஸ்கர், “இது அவருக்கு இந்திய அணியில் மிடில் ஆடரில் நிரந்தர இடம் பெற உதவவில்லை என்றால், வேறு எது உதவும் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.

முன்னாள் கேப்டனாக கவாஸ்கர் அணியின் நான்காவது இடத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பரிந்துரைத்தார். ரிஷப் பன்ட்டை விட ஸ்டைலான வலது கை வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் தான் நம்பர் 4 இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்று கவாஸ்கர் கூறினார்.

“என்னை பொருத்த வரையில், தோனியை போன்று ரிஷப் பன்ட் 5 அல்லது 6வது இடத்தில் ஆடினால், சிறந்த ஃபினிஷராக இருந்து, ஆட்டத்தை முடிப்பார்,” என்றார் கவாஸ்கர்.

“40-45 ஓவர்களுக்கு இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை தொடங்க வேண்டுமானால் விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆடுவார்கள், பன்ட் நான்காவது இடம் பெறலாம். 30-35 ஓவர்கள் ஆடும்போது ஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவதி இடத்துக்கு பொருத்தமானவர் மற்றும் பன்ட் ஐந்தாவது இடத்தில் ஆடலாம்.”

ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷப் பன்ட் (20) ஆகியோரின் விக்கெட்டுகளை இந்தியா விரைவாக இழந்ததால், கேப்டன் விராட் கோலி (120) உடன் ஐயர் 125 ரன்கள் சேர்த்தார்.

24 வயதான ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இருந்தார். ஆனால், மழை காரணமாக ஆட்டம் 13 ஓவருடன் கைவிடப்பட்டது.

“அவர் தனது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் 5 வது இடத்தில் ஆட வந்தார். அவருக்கு ஏராளமான ஓவர்கள் இருந்தன. அவருடன் கேப்டன் விராட் கோலியின் இருந்தார். கேப்டன் உங்களிடமிருந்து அழுத்தத்தை எடுப்பதால் விளையாடுவது எளிதாகி விடுகிறது” என்றார்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பு அமைய வேண்டுமென கவாஸ்கர் நம்புவதாக கூறினார்.

“இதற்கு முன்பாக அவர் ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்தார். இதில் அதிகபடியாக 88 ரன்கள் குவித்தார். 15 பேரில் இடம்பெறாத அளவிற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், அது கடந்த காலம்”.

“இப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த முதல் வாய்ப்பிலேயே 71 ரன்கள் குவித்துள்ளார். அதனால் அவர் நெடுந்தூரம் செல்வார்.”

 

Sathish Kumar:

This website uses cookies.