சுப்மன் கில் இத்துடன் நிற்கப்போவதில்லை இன்னும் பல செஞ்சுரிகள் அடிப்பார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில், அபாரமாக விளையாடி 194 பந்துகளில் சதம் விளாசினார். இவர் 235 பந்துகளில் 128 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும்.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்தது. அதை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு துவக்க வீரராக இருக்கும் சுப்மன் கில், பொறுப்பை எடுத்துக்கொண்டு விளையாடி சதம் விளாசியது இந்திய அணி இலக்கை நெருங்கி முன்னிலை பெற வழிவகுத்துள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருக்கும் ஃபார்மை தற்போது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து எடுத்துச்செல்கிறார். இந்தாண்டு இவருக்கு ஒரு கனவு ஆண்டாகவே இதுவரை அமைந்திருக்கிறது. இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு செஞ்சுரி மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் சதம் அடித்தார்.
அபாரமான பார்மில் இருந்து வரும் சுப்மன் கில்லை நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் முடிவுற்றவுடன் நேர்காணல் செய்தபோது புகழ்ந்துள்ளார் ஜாம்பவான் சுப்மன் கில். அவர் பேசியதாவது:
“இப்போது தான் 2 டெஸ்ட் செஞ்சுரிகள் வந்திருக்கிறது. இன்னும் பல செஞ்சுரிகள் அடித்து 8000, 10000, 15000 ரன்களை மென்மேலும் அடிக்க வேண்டும்.” என்று வாழ்த்தினார். (ஹிந்தியில் பேசிய உரையாடல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)
3ம் நாள் துவங்குவதற்கு முன் சுப்மன் கில் பேட்டிங் அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியாக அவர் செஞ்சுரிகள் அடித்து வருவதற்கு என்ன டெக்னிக் உதவுகிறது என்பதை பற்றி அலசினார் சுனில் கவாஸ்கர்.
“கில் பந்தை தடுத்து ஆடும்போது, நன்றாக முன்னோக்கி வந்து முதுகை வளைத்து தடுக்கிறார். இது சிறந்த டெக்னிக். மிட்ச்சல் ஸ்டார்க்கை எதிர்கொள்ளும்போதும் இவ்வாறு செய்வது எளிதல்ல. மேலும் பேட்டை திருப்பாமல் நேராக வைத்து தடுக்கிறார். இதுவும் தவறுகள் நடக்காமல் இருக்க அவருக்கு உதவுகிறது.
அவர் அதிகமாக பின்னோக்கி சென்று ஆடுவதில்லை. முன்னோக்கி வந்து பந்தை அணுகுகிறார். இதனாலும் தவறின்றி தடுத்து ஆடமுடிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க இப்படியான டெக்னிக்குகள் தான் தேவை.” என்றார்.