இவங்க ரெண்டு பேரையும் இன்னும் டீம்ல வச்சிருக்க, இதுமட்டுமே காரணம்; உண்மையை போட்டுடைத்த கவாஸ்கர்!!

இந்திய அணியில் தொடர்ச்சியாக புஜாரா மற்றும் ரஹானே இருவரும் இடம்பெற்று வருவதற்கு காரணம் இது மட்டுமே என ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மிடில் ஆர்டரில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களாக இருந்துவரும் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் இந்திய அணியில் இவர்களுக்கு வீணாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது, இவர்களை மாற்றி ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் விஹாரி இருவருக்கும் வாய்ப்புகள் கொடுத்துப் பார்க்கவேண்டுமென பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ரஹானே, 2021 ஆம் ஆண்டு 23 இன்னிங்சில் விளையாடி, வெறும் 20.28 சராசரியாக கொண்டிருக்கிறார். புஜாரா 26 இன்னிங்சில் 28.00 சராசரியாக கொண்டிருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இருவரையும் விரைவில் மாற்ற வேண்டும் என கருத்துக்கள் வெளிவந்தபோது, தென்னாப்பிரிக்கா அணியுடனான 2வது இன்னிங்சில் மிகச் சிறப்பாக விளையாடி இருவருமே அரைசதம் அடித்தனர். அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோல்வியை தழுவியது.

இருப்பினும் இவர்கள் இருவரும் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வருவதற்கு காரணம் இதுதான் என்று கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

“இந்திய அணி நிர்வாகம் ரஹானே மற்றும் புஜாரா இருவரையும் தக்கவைத்து வருவதற்கு காரணம், அவர்களின் அனுபவம் மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் இந்திய அணிக்கு கொடுத்த பங்களிப்பு மட்டுமே. அனுபவமிக்க வீரர்கள் மிகச்சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தால், எந்தவித தவறும் கூறமுடியாது. அன்றைய நாள் அந்த பந்து வீச்சாளருக்கு என்று விட்டுவிட வேண்டும். அதேநேரம் மிக தவறான பந்தில் ஆட்டம் இழந்தால் மட்டுமே கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டும். 

2021 ஆம் ஆண்டு முழுவதும் இவர்கள் இருவரும் ஆடிய விதம், அணிக்கு எந்த விதத்திலும் பங்களிப்பாக இல்லை. ஆனாலும் அவர்கள் ஆட்டமிழந்தது அதிக அளவில் நல்ல பந்துகளுக்கு. இதன் காரணமாகவே இவர்கள் இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.” என்றார்.

 

Prabhu Soundar:

This website uses cookies.