மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வருகிறார் ரெய்னா? வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோ!
மலைப்பகுதியில் சுரேஷ் ரெய்னா தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோ பதிவு இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை சுமார் 53 நாட்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 20ஆம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பலர் தனி விமானம் மூலம் துபாய் மற்றும் அபுதாபி சென்று, தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வந்தனர்.
தனிமைப்படுத்துதல் முடிந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என வந்த வீரர்கள் தங்களது இயல்புநிலை பயிற்சியை துவங்கினர். துரதிஸ்டவசமாக சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் மேலும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தனர்.
அடுத்த சில நாட்களிலேயே இரண்டாம் கட்ட பரிசோதனையில், வீரர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்ததால் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுரேஷ் ரெய்னா யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக விலகி இருக்கிறார் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ரெய்னா ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒரு போட்டியை கூட தவற விடவில்லை. இந்நிலையில் இப்படி தொடர் முழுவதும் ஆடப் போவதில்லை என அறிவித்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி தரும் விதமாக சுரேஷ் ரெய்னா தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. ரெய்னா மலைப்பகுதியில் தீவிர பயிற்சி செய்து வரும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
மேலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெய்னா கூறுகையில், “நான் ஊரடங்கு காலத்தில் இங்கு தான் தீவிரமாக பயிற்சி செய்து வந்தேன். என்னை மீண்டும் அணியின் வீரர்களுடன் காணலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.” என அதிரடியாக தெரிவித்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.