“நான் வலைப்பயிற்சியில் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் மகேந்திர சிங் தோனி தான்.” என்று யாரும் அறிந்திராத நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார் சுரேஷ் ரெய்னா.
சிஎஸ்கே மற்றும் இந்திய அணிகளின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசுகையில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா பேசியதாவது:
“போட்டிகளில் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் என்றால் அது மலிங்கா மற்றும் முத்தையா முரளிதரன் இருவரும் தான். வலைப்பயிற்சியில் மகேந்திர சிங் தோனி. நான் இந்தப் பதிலைச் சொல்லும் பொழுது நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். வலைப்பயிற்சியில் அவர் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின், வேகம், மிதவேகம் என பல்வேறு வகைகளில் பந்துவீசுவார்.
மேலும் அவரது பவுலிங் அவுட் ஆகிவிட்டால், அடுத்த ஒன்றரை மாதத்தில் அதை வைத்து கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பார். அவரது அருகிலேயே செல்ல முடியாது. மேலும் பலமுறை நோபால் வீசுவார். அதை எடுத்துச் சொன்னால் ஒத்துக் கொள்ளவே மாட்டார் (சிரித்தபடி). டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசுவார். அவரது பந்துவீச்சில் நன்றாக ஸ்விங் ஆகும்.” என்றார் சுரேஷ் ரெய்னா.