47 பந்தில் 120 ரன்கள் ! சச்சின் டெண்டுல்கர் மகனின் ஓவரில் 21 ரன்கள் அடித்து நொறுக்கிய சூர்யகுமார் !
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்கப்போகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அணியும் தற்போது தயாராகி வருகின்றன. இந்த கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை அணி பயிற்சி ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் மும்பை அணி மற்றும் மும்பை டி அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது இதில் மும்பை அணிக்கு சூரியகுமார் மும்பை டி அணிக்கு யாஹஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டனாகப் செயல்பட்டனர்.
இதில் மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3வது வீரராக களமிறங்கி அடித்து நொறுக்கினார். எதிரணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்துக் கட்டினார். அதிரடியாக ஆடிய அவர் 47 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 9 சிக்சர்கள் அடங்கும். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 13 ஆவது ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசி 21 ரன்கள் அடித்து நொறுக்கினர்.
சூரியகுமார் ஆடிய இந்த அதிரடியான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 213 ரன்கள் குவித்தது. அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமை ஏற்ற மும்பை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து தன்னை மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் விளையாடிய அவர் 14 போட்டிகளில் 450 ரன்கள் பெற்றிருந்தார். இருந்தாலும் இவரை ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக கடந்த மூன்று வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். 2018 மட்டும் 2019ஆம் ஆண்டு 500 ரன்கள் மற்றும் 2020ஆம் ஆண்டு 450 ரன்கள் அடித்து இருந்தாலும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.