இந்திய அணிக்காக தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் டி.20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றியுள்ளார்.
சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி., வெளியிட்டுள்ளது.
டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணிக்காஅ தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் 44 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய வீரரும், சூர்யகுமார் யாதவ் தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு டி.20 தொடரில் சதம் அடித்ததன் மூலம், சூர்யகுமார் யாதவால் இந்த உயரத்தை எட்ட முடிந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். முகமது ரிஸ்வான் இரண்டாவது இடத்திலும், மார்க்ரம் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
இதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் டாப் 10-ல் இடம் பிடித்தார். அவர் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் நோர்க்கியாவுடன் 7-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இருவரும் 658 புள்ளிகளுடன் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் ஜாஸ் ஹசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் அடில் ரசீதும், மூன்றாவது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் தப்ரைஸ் சம்சியும் உள்ளனர்.