இதனால் தான் சூரியகுமார் யாதவ் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் ராகுல் டிராவிட்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நடைபெற்று வரும் இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இதனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் மாறி மாறி இருந்த அவர், 863 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு அவர் முழு தகுதி உடையவர் என்று பல ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நம்பர் 1 இடத்திற்கு முன்னேறிய பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் நடைபெற்ற போட்டியிலும் அசத்தினார்.
தொடர்ந்து உலக கோப்பையிலும் அதற்கு முன்னர் நடந்த தொடர்களிலும் கடந்த ஓராண்டாக இந்திய அணிக்கு பங்களிப்பை கொடுத்து வரும் இவரை பற்றி சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அவரது பேட்டிங் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று ராகுல் டிராவிடம் கேள்வி கேட்டதற்கு சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார்.
“சூரியகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். தொடர்ச்சியாக பங்களிப்பை கொடுத்து வருவதன் காரணமாகத்தான் அவர் நம்பர் ஒன் வீரராக இருக்கிறார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் விளையாடும் ஷாட்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறது. குறிப்பாக பல போட்டிகளில் தொடர்ந்து இருநூறு ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் மேல் வைத்திருப்பது பெரிய ப்ளஸ்.
வலைப்பயிற்சியில் இடைவிடாத பயிற்சியை செய்கிறார். நீண்ட நேரம் தனது ஷாட்டுக்காக எடுத்துக் கொள்கிறார். அவரது கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கும் பலன் இது. இந்திய அணி உலக கோப்பை வெல்லும் பட்சத்தில் அதற்கு முழு முக்கிய காரணமாக இவர் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.” என்றார்.