சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த விண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் ஒருநாள் மற்றும் டி.20 தொடர் என இரு தொடரையுமே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஒருநாள் போட்டிகளை விட டி.20 போட்டிகளில் அசுரபலம் கொண்ட விண்டீஸ் அணியை, இந்திய அணியால் இலகுவாக வீழ்த்த முடிந்ததற்கு சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் போன்ற இளம் வீரர்களின் பொறுப்பான ஆட்டம் மிக முக்கிய காரணியாக இருந்தது.
இந்தநிலையில், விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை பெரும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளனர்.
விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 போட்டியில் மொத்தம் 107 ரன்கள் குவித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் இதன் மூலம், டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 35 இடங்கள் முன்னேறி 21வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல் விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரில் 92 ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர், இதன் மூலம் 203 இடங்கள் முன்னேறி 115வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு பெரும் சவாலாக திகழ்ந்த விண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் 5 இடங்கள் முன்னேறி 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இது தவிர சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மிக சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்டன் ஆகர் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி.20 போட்டிகளில் சிறந்த விளங்கும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணியின் தப்ரைஸ் ஷம்சி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.
அதே போல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி முதல் இடத்திலும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் 2வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் மொய்ன் அலி 3வது இடத்திலும் உள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள்ளும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.