தடை செய்யப்பட்ட அளவு ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதற்காக இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத காலம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16 ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டும் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என பலர் பாராட்டியுள்ளனர். சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும் அவர் அடித்துள்ளார்.
பிரிதிவி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்தது. இந்த மருந்தை அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் எடுத்துக் கொண்டிருக்கலாம். இது சர்வதேச ஊக்கமருந்து தடை அமைப்பினால் (வாடா) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும்.
இதையடுத்து தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பிரிதிவி ஷா எடுத்துக்கொண்டதால் 8 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடைவிதித்து பிசிசிஐ நேற்று உத்தரவிட்டது. இதை முன்தேதியிட்டு கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாகவும், தடையின் காலம் நவம்பர் 15-ம் தேதி முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தடை குறித்து இளம் வீரர் பிரிதிவி ஷா கூறுகையில், ” மிகவும் உண்மையுடன் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்கிறேன். எல்லாம் என் தலைவிதி. இப்போதும்கூட நான் காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறேன், பிசிசிஐ அளித்த தண்டனை என்னை உலுக்கிவிட்டது.
விளையாடும் வீரர்கள் உடல்நலக்குறைவால் எடுக்கும் மருந்துகளில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் ஏதேனும் கலந்திருக்கிறதா என்பதைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும், எப்போதும் விளையாட்டு வீரர்கள் முறையான விதிகளைக் கடைபிடிப்பது, கவனத்துடன் இருப்பது அவசியம்.
நான் ஆஸ்திரேலியா தொடருக்குச் சென்றபோது அங்கு எனக்குக் காலில் காயம் ஏற்பட்டு இந்தியா திரும்பினேன். அதன்பின், விளையாட வேண்டும் என ஆசையோடு பல்வேறு பயிற்சிகளில் இறங்கினேன், அப்போது, உடல்நலக் குறைவால் இதுபோன்ற தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை தெரியாமல் எடுத்துவிட்டேன்.
கிரிக்கெட்தான் என்னுடைய வாழ்க்கை. இந்தியாவுக்காகவும், மும்பைக்காகவும் விளையாடுவதைக் காட்டிலும் மிகப்பெரிய பெருமை, கவுரவம் வேறு ஏதும் எனக்கு இல்லை. இந்தத் தடையில் இருந்து வெளியே வரும்போது இன்னும் வலிமையாகவும், வேகமாகவும் நான் இருப்பேன்” என்று பிரிதிவி ஷா தெரிவித்தார்.