உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது. இதில் நாக் அவுட் சுற்று நடைபெற்று வருகிறது.
இன்று செஸ் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து இரு அணிகள் இன்றைய முதல் போட்டியில் மோதின.
லீக் போட்டியில் அசத்தல்
சுவீடன் அணி ‘லீக்’ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் (1-2) தோற்று இருந்தது. தென்கொரியா (1-0), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது.
சுவிட்சர்லாந்து தோல்வி எதையும் சந்திக்கவில்லை.பிரேசிலுடன் 1-1 என்ற கணக்கிலும், கோஸ்டா ரிகாவுடன் 2-2 என்ற கணக்கிலும் ‘டிரா’ செய்து இருந்தது. செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
சமநிலையான முதல் பாதி
ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் ஆட்டம் தொடங்கியது.ஆட்டத்தின் பாதி நேரம் வரை இரு அணி வீரர்களும் போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி போட்டியில், ஸ்வீடன் அணியின் எமில் போர்ஸ்பார்க் ஆட்டத்தின் 66 வது நிமிடத்தில் கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்தை, சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் பிடிக்க இருந்த நிலையில், மற்றொரு சுவிட்சர்லாந்து வீரரான மேனுவேல் மகஞ்சியின் காலில் பட்டு கோல் கீப்பரிடம் இருந்து விலகி கோல் போஸ்ட்டில் நுழைந்தது. இதனால், ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இறுதியாக, முழு நேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி கோல் எதுவும் போடாததால், ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஸ்வீடன் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இரண்டாவது நாக் அவுட் போட்டியில் வெற்றி பெறும் அணி, காலிறுதியில் ஸ்வீடனை எதிர்கொள்ள உள்ளது.