தோனியின் பயோபிக் படத்தில் இருப்பது உண்மை இல்லை! அவர் தேர்வானது இப்படித்தான்! இது யாருக்கும் சொல்லப்படாத உண்மைக்கதை

2004-ம் ஆண்டு தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் கிழக்கு மண்டலத்துக்காக ஆடிய தோனி, தேர்வாளர்கள் இருக்கும் திசை நோக்கியே சிக்ஸர்களை பறக்கவிட்டு, இந்திய அணிக்குள் தேர்வானார் என்பார்கள். இதை தோனியின் பயோ- பிக் படத்தில் கூட அழகாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், கிழக்கு மண்டல அணிக்கு தோனி தேர்வானது குறித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. தோனி கிழக்கு மண்டல அணிக்கு தேர்வானதுக்கு காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சயத் கிர்மானி.

1983-ம் ஆண்டு இந்திய அணி முதல் முதலாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியபோது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர்தான் சயத் கிர்மானி. அந்த தொடரின் சிறந்த விக்கெட் கீப்பர் விருதையும் வாங்கியவர். இவர் தற்போது தோனியை தான் எதற்காக தேர்வு செய்தேன் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “இதற்கு முன் எப்போது தோனியை ஏன் அன்று கிழக்கு மண்டல அணிக்காக தேர்வு செய்தேன் என்று யாரிடம் சொன்னதில்லை. இப்போதுதான் முதல்முறையாக அதுகுறித்து பேசுகிறேன்.

அன்று நானும், கிழக்கு மண்டல அணியின் சக அணி தேர்வாளரான பிரனாப் ராய் என்பவரும் ரஞ்சி டிராபி போட்டியை நேரில் பார்த்துக்கொண்டு இருந்தோம். யாருக்கு எதிரான போட்டி என்பதெல்லாம் நியாபகம் இல்லை. ஆனால், பிரனாப்தான் இந்தச் சம்பவம் நடந்ததற்கான சாட்சி. போட்டியின் இடையே பிரனாப் என்னிடம், `ஜார்க்கண்ட் அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் இருக்கிறார். அவரது ஆட்டம் நம்பிக்கை தரும் விதமாக இருக்கிறது’ என்றார். நான் அவரிடம், `இந்தப் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறாரா?’ என்று கேட்டேன்.

அதற்கு பிரனாப், `இன்று அவர் கீப்பிங் செய்யவில்லை. ஃபைன் லெக் திசையில் ஃபீல்டிங் செய்கிறார்’ என்று சொன்னார். அன்றைய போட்டியின்போதுதான் தோனியின் இரண்டு வருட ஆட்டம் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தேன். வாவ், தொடர்ச்சியாக அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. அன்று அவர் விக்கெட் கீப்பிங் செய்வதைப் பார்க்காமலே கிழக்கு மண்டல அணிக்காக தேர்வு செய்தேன். அதன் பின்னர் நடந்தது எல்லாமே வரலாறு” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “விக்கெட் கீப்பர் என்பவர், கேப்டனுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். கீப்பருக்கு தான் சிறந்த பீல்டிங் பொஸிஷன்கள் தெரியும். தோனி இந்திய அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட்டுக்கே நடந்த நல்ல விஷயம் என்பேன். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் முக்கியத்துவத்தை தோனி உணர வைத்துவிட்டார்.

நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்தபோது, எனது கமிட்டியில் இருந்தவர்களே, அவருக்கு கேப்டன் என்பது கூடுதல் சுமை. அவரது ஆட்டத்தை இது பாதிக்கும் என்றார்கள். ஆனால், தோனி அவர்கள் முடிவு தவறானது என மாற்றிக்காட்டினார்” என்றார் பெருமிதத்தோடு.

Sathish Kumar:

This website uses cookies.