கர்நாடகாவை காலி செய்த பஞ்சாப்… சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி
சையத் முஸ்தாக் அலி டிராபியில் கர்நாடகா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி சூப்பர் ஓவர் முலம் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.
இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இந்த ஆண்டுக்கான இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற போராடி வருகின்றனர்.
இதில் பஞ்சாப்பில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணி, கர்நாடாவை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணிக்கு ஜோஷி 40 ரன்களும், கவுதம் 36 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கர்நாடகா அணி 158 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக பால்டேஜ் சிங் 3 விக்கெட்டுகளையும், கோனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மந்தீப் சிங் 45 ரன்களும், ஹர்பஜன் சிங் 33 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, கர்நாடகா அணி எடுத்திருந்த அதே 158 ரன்களை எடுத்ததால் போட்டி டிராவானது.
இதனையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அந்த ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணியை, பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் 11 ரன்களில் கட்டுப்படுத்தியதன் மூலம் சூப்பர் ஓவர் மூலம் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.