சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அறிவுரை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர்களில் சாதித்து பல வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக பந்துவீசி பலரின் கவனத்தை ஈர்த்த நடராஜனுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக உள்ளே வந்த அவருக்கு ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் மற்றும் தற்போது டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்து தன்னை நிரூபித்துக் காட்டினார்.
மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதியில் இருந்து தனது கடின உழைப்பால் உயர்ந்து வந்த இவருக்கு சமூகவலைதளங்களில் மட்டுமல்லாது மீண்டும் நாடு திரும்பிய பிறகு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் இவர் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் வாழ்த்துக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்திய அணியில் நடராஜன் எந்தளவிற்கு கவனமுடன் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இர்பான் பதான் கூறுகையில், “நடராஜன் மூன்றுவித போட்டிகளிலும் விளையாடி இருப்பது பெருமிதமாக இருக்கிறது. அதேநேரம் டெஸ்ட் போட்டிகளில் அவர் இன்னும் திறம்பட செயல்பட நிறைய வேலைப்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக பந்து வீசும் இடம் மற்றும் முறை இரண்டையும் சற்று கவனிக்க வேண்டும். பந்து வீசுவதற்கு முன்னாள் அவரது உடல் பகுதி பந்திற்கு பின்னே இருக்க வேண்டும். இப்படி செய்கையில், பந்தை பேட்ஸ்மேன்களுக்கு உள்ளே எடுத்துச் செல்ல முடியும். டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அவருடைய பலம் என்னவென்றால் பந்துவீச்சு ஆக்சன் எவ்விதத்திலும் மாறாமல் இருக்கிறது. இதன் மூலம் காயம் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகள் இருக்கிறது.
நன்கு கவனம் செலுத்தினால் என்னும் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை தொடர்ந்து அவரால் இந்திய அணியில் உடல் ஆரோக்கியத்துடன் விளையாட முடியும் என்றார்