கே.எல் ராகுலுக்கு இடம் கிடைக்குமா…? வங்கதேச போட்டிக்கான இந்திய அணி இது தான்
வங்கதேச அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்போம்.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் இரண்டு போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.
மூன்று போட்டியில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, இன்று (02-11-22) நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது. துவக்க வீரரான கே.எல் ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அவருக்கான வாய்ப்பு நிச்சயம் மறுக்கப்படாது என்றே தெரிகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது. அடுத்ததாக கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கடந்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை என்பதாலும், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது தினேஷ் கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டதாலும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கடந்த போட்டியில் 43 ரன்கள் வாரி வழங்கிய ரவிச்சந்திர அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருவதால் வழக்கம் போல் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோரே இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்/ ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின்/யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஸ்தீப் சிங்.