இந்தியாவில் பாதி ஐபிஎல் போட்டிகள் நடந்த வேளையில் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், விளையாட்டு வீரர்களின் நலன் கருதி ஐபிஎல் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது மீண்டும் ஐபிஎல் தொடரை பாதுகாப்பான முறையில் சென்ற ஆண்டு இறுதியில் நடத்தியது போல இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 20-ம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை மொத்தமாக 20 நாட்களுக்குள் மீதமுள்ள 31 போட்டிகளை பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக இணைந்துள்ள மஸ்கட் மைதானம்
துபாய் சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மைதானங்களில் சென்ற ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது, ஆனால் இந்த ஆண்டு மொத்தமாக நான்கு மைதானங்களில் ஐபிஎல் நடக்க இருக்கிறது. ஓமனிலுள்ள மஸ்கட் மைதானத்திலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தமாக நான்கு மைதானங்களில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.
உலக கோப்பை டி20 தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ தலைவர் கங்குலி முன்பே கூறியிருந்தது போல், ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் சுமார் 2500 கோடி ரூபாய் பிசிசிஐ நிர்வாகத்திற்கு நஷ்டமாகும். எனவே முடிந்தவரை ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க தான் தற்போது பிசிசிஐ எண்ணுகிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனோ எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இருந்தாலும், மீண்டும் மூன்றாவது அலை வர இருக்கின்ற நிலையில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்துவது தான் சரி என்கிற முடிவுக்கு தற்போது பிசிசிஐ வந்துள்ளது.
ஐபிஎல் தொடரை தொடர்ந்து உலகக் கோப்பை டி20 தொடர் நடக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். 8 அணிகளை கொண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்த முடியாத நிலையில் 16 அணிகளை கொண்ட உலக கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடத்த வாய்ப்புகள் குறைவு என்று தற்போது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வந்து விளையாடும் பட்சத்தில் மிகப் பாதுகாப்பாக விளையாடியாக வேண்டும், அதையே ஒவ்வொரு வீரர்களும் விரும்புவார்கள். எனவே தற்போது உள்ள சூழ்நிலைபடி பார்த்தால் இந்தியாவில் வைத்து உலக கோப்பை டி20 தொடர் நடைபெற வாய்ப்புகள் மிக மிக குறைவு. எனவே உலக கோப்பை டி20 தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்துவது தான் சரி என்கிற முடிவுக்கும் பிசிசிஐ வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.