டி 20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால் ஐபிஎல் தொடரை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
டி 20 உலகக்கோப்பைத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முயற்சி எடுத்து வருகிறோம் என்று ஆஸ்திரேலிய நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் கூறியுள்ளார்.
அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் திட்டமிடப்பட்டுள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் குறித்த முக்கிய முடிவுகள் இன்று ஐசிசி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. கரோனா பயம் காரணமாக இந்தத் தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடர் குறித்த ஐசிசியின் முடிவை பொறுத்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் குறித்த தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். ஒரு வேளை டி 20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி நடைபெறாவிட்டால் ஐபிஎல் தொடரை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக், திட்டமிட்டபடி டி 20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசி உள்ள அவர் , “டி 20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்கு ஆஸ்திரேலிய மாநிலங்கள், பிரதேசங்களின் கையில் உள்ளது. இது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் எந்த அளவுக்கு என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டி 20 உலகக் கோப்பை தொடரை உலகில் உள்ள அனைவரும் நிச்சயமாக நேரில் வந்து பார்ப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதே நேரம் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பான சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை நடந்த்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை உள்ளூர் அமைப்புக் குழு, ஆஸ்திரேலிய அரசு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறது. சர்வதேச அணிகளின் வருகை, வீரர்களின் தங்குமிடம், அவர்களுக்கான பயிற்சி சூழல்கள் ஆகியவையும் இதில் அடங்கும்” என்று கூறியுள்ளார்.