இனி கொஞ்சம் அடங்கியே இருங்க…. மொத்தமாக பழீ தீர்த்த இந்திய அணி… பெரும் சிக்கலில் சிக்கி கொண்ட ஆஸ்திரேலியா
டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
சர்வதேச டி.20 போட்டிகளுக்கான டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 51வது போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
டேரன் சமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 27* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்கள் குவித்தது.
இதன்பின் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் அரையிறுதி வாய்ப்பு என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஸ் 37 ரன்களிலும், மேக்ஸ்வெல் 20 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். முக்கியமான போட்டிகளில் இந்திய அணிக்கு பெரும் சவாலாக திகழ்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ட்ராவிஸ் ஹெட் இந்த போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சித்தார்.
பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ட்ராவிஸ் ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்த போது, பும்ராஹ் வீசிய போட்டியின் 17வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.