டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், கே.எல் ராகுலும் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
பந்துவீச்சில் அசுரபலம் கொண்ட அணியான ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட கே.எல் ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் குவித்தது. கே.எல் ராகுல் 48 பந்துகளில் 69 ரன்களிலும், ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இறுதி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், மூன்று மிரட்டல் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள இந்திய அணி 210 ரன்கள் குவித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் கரிம் ஜனத் மற்றும் குல்பதீன் நைப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.