இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை ஈசியாக துவம்சம் செய்த தென் ஆப்ரிக்கா; இங்கிலாந்திற்கு இமாலய இலக்கு !!

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதி வருகின்றன.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான டி காக் 27 பந்துகளில் 34 ரன்கள் குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாண்டர் டூசன் – மார்க்ரம் கூட்டணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வகுத்த அனைத்து வியூகங்களையும் தவிடுபொடியாக்கிய இந்த ஜோடி இறுதி பந்துவரை களத்தில் நின்று வாணவேடிக்கை காட்டியதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 189 ரன்கள் குவித்துள்ளது.

வாண்டர் டூசன் 60 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 94* ரன்களிலும், மார்க்ரம் 25 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி மற்றும் அடில் ரசீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். மற்ற வீரர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.