இங்கிலாந்து அணியின் கடின போராட்டத்திற்கு ஒரே ஓவரில் முடிவு கட்டிய ரபாடா; தென் ஆப்ரிக்கா அணி மிரட்டல் வெற்றி !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதின.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வாண்டர் டூசன் 60 பந்துகளில் 94* ரன்களும், மார்க்ரம் 25 பந்துகளில் 52* ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பாரிஸ்டோவை (1) தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது வேலையை சரியாக செய்து கொடுத்தனர். குறிப்பாக மிடில் ஓவர்களில் லிவிங்ஸ்டன் (28 ரன்கள் 17 பந்துகள்) மற்றும் மொய்ன் அலி (37 ரன்கள் 27 பந்துகள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை வந்தது.

கடின போராட்டத்தின் மூலம் வெற்றிக்கு மிக அருகில் வந்துவிட்ட இங்கிலாந்து அணி, 6 பந்துகளில் 14 ரன்கள் அசால்டாக அடித்துவிடும் என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய காகிசோ ரபடா, இங்கிலாந்து அணியின் வெற்றி கனவையும் கலைத்தார். இதனால் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் சம்சி மற்றும் பெரட்ரியோஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Mohamed:

This website uses cookies.