வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. விண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக லீவிஸ் 56 ரன்களும், பொலார்ட் 26 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் கேப்டனான டெம்பா பவுமா 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான ஹென்ரிக்ஸ் 39 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த டூசன் – மார்கரம் ஜோடி வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன் குவித்தது. மார்கரம் 51* ரன்களும், டூசன் 43* ரன்களும் எடுத்ததன் மூலம் 18.2வது ஓவரிலேயே இலக்கை எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு இந்த தொடரில் இது முதல் வெற்றியாகும், அதே வேளையில் விண்டீஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.