வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதின.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக நயிம் 62 ரன்களும், முஸ்பிகு ரஹிம் 57 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் முக்கிய வீரர்களான பெரேரா (1), நிஷான்கா (24), அவிக்ஷா பெர்னாண்டோ (0) மற்றும் ஹரங்கா (6) ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாரித் அஸ்லன்கா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய பனுகா ராஜபக்சே 31 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றுள்ளது.