தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சரிந்த ஆப்கன் அணி 125 ரன்களுக்கு ஆல்அவுட்டானது முறை மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த உலகக் கோப்பையில் ஒரு வெற்றியைக் கூட இரு அணிகளும் பதிவு செய்யாத நிலையில் கார்டிஃப் சோபியா கார்டன்ஸில் சனிக்கிழமை ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்கன் தரப்பில் ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நூர் அலி ஸட்ரன் களமிறங்கினர். 5.5 ஓவரில் ஸ்கோர் 33 ஆக இருந்த போது, பலத்த மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
22 ரன்கள் எடுத்த ஹஸ்ரத்துல்லா, ரபாடா பந்துவீச்சில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 6 ரன்களுடன் கிறிஸ் மோரிஸ் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். நிதானமாக ஆடிய ஆப்கன் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்திருந்தது.
2-ஆவது முறையாக மழை பாதிப்பு: அப்போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது நூர் அலி ஸட்ரன் 32, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பின்னர் ஓவர்கள் 48 ஆக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது.
விக்கெட்டுகள் சரிவு: நூர் அலி ஸட்ரன் 32, ஷாஹிதி 8, அஷ்கர் ஆப்கன் 0, முகமது நபி 1 என விக்கெட்டுகள் சரிந்தன. அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 70 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது ஆப்கானிஸ்தான்.
இம்ரான் தாஹிர், பெலுக்வயோ ஆகியோரின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆப்கன் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன.
கேப்டன் குல்பதீன் நைப் 5 ரன்களோடு அவுட்டானார்.
பின்னர் ரஷித் கான்-இக்ரம் அலி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றனர். அப்போது இக்ரம் கலில் 9, ரஷித் கான் 35, ஹமித் ஹாசன் 0 என வெளியேறிய நிலையில், 34.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான்.
இம்ரான் தாஹிர் 4 விக்கெட்:
தென்னாப்பிரிக்க தரப்பில் இம்ரான் தாஹிர் 4-29, கிறிஸ் மோரிஸ் 3-13, பெலுக்வயோ 2-18 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்லாவும் டிகாக்கும் பொறுமையாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அந்த அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
டி காக், 68 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அம்லா 41 ரன்னும் பெலுக்வாயா 17 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
4 விக்கெட் வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.