கடைசி பந்து வரை பரபரப்பு… மாஸ் காட்டிய வாசிங்டன் சுந்தர்; இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது தமிழ்நாடு அணி !!

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி தமிழக அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிகாட்ட வழிவகுத்து வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் காலிறுதி சுற்று முடிவில் ஹிமாச்சல் பிரதேசம், சர்வீசஸ், தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டு விளையாடியது.

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. சவுராஷ்டிரா அணியில் அதிகபட்சமாக ஜாக்சன் 134 ரன்களும், வசாவடா 57 ரன்களும், விஸ்வராஜ் ஜடேஜா 52 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு அணி சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 122 ரன்னில் வெளியேறினார். பாபா இந்திரஜித் 50 ரன்னில் அவுட்டானார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 70 ரன் எடுத்தார். மிகவும் பரபரப்பாக கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை தமிழக அணி எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில், சர்வீசஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இமாசல பிரதேசம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2021 – 2022ம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (26ம் தேதி) ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இதில் இமாச்சல பிரதேச அணியும், தமிழ்நாடு அணியும் மோத உள்ளன.

Mohamed:

This website uses cookies.