‘உலக நாகரிகத்துக்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழி’- தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஹர்பஜன் சிங் தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார். ஆனால், 11-வது ஐபிஎல் சீசனில் ஹர்பஜன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அறிமுகத்தின்போது, ரஜினியின் ‘கபாலி’ பட வசனங்களைக் குறிப்பிட்டு ஹர்பஜன் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில் காவிரி நதி நீர் மேம்பாட்டு வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், சென்னையில் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் நடந்த சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வீரர்கள் மீது செருப்பு வீச்சு நடந்ததால், போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டன.

அதுதொடர்பாக ஹர்பஜன் ட்வீட் செய்தபோது கூட, சென்னையில் விளையாட முடியாதது வருத்தமளிக்கிறது. பிறமண்ணில் களம் கண்டாலும், தமிழ்மண்ணின் மீதான பாசமும், நேசமும் குறையாது என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை 1 இன்று பிறந்துள்ளது இதையொட்டி ட்விட்டரில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தமிழில் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

அதில், ”தமிழா இது உன்னுடைய புத்தாண்டு, சோகங்கள், துன்பங்கள், அனைத்தும் மறந்து புதிய பாதை பிறக்கும். புதிய விடியலைப் பார்க்கக் காத்திருக்கும் விழிகளுக்கும் நன்மை வந்து சேரட்டும். உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தமிழ்மொழியாய் கொண்ட என் தோழமை இனத்திற்கு புத்தாண்டு வாழ்த்துகள்” என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

Editor:

This website uses cookies.