உலகின் தலைசிறந்த டி20 லீக்கான ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற மெஹ்முதுல்லா தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர்தான் தலைசிறந்ததாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு அணிகளும் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
வங்காளதேச அணியின் மோர்தசா, அப்துர் ரசாக், முகமது அஷ்ரபுல், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளனர். இதில் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
வங்காள தேசம் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டன் மெஹ்முதுல்லா சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் மெஹ்முதுல்லா ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தகுதியானவர் என தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் ஏலம் எடுக்க மெஹ்முதுல்லா தகுதியானவர். குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த மூன்று நான்கு வருடங்களாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காதது துரதிருஷ்டவசமானது’’ என்றார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் கிரிக்கெட் போட்டிகள் நடந்த திட்டமிடப்பட்டாலும் அதற்காக சில விதிமுறைகள் அமல் படுத்தப்படும் என தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இப்படி ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளில் பங்கேற்பது புது அனுபவமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிச்சயம் நடக்கும் என ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 60 சதவீதம் ரசிகர்கள் நம்புவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகள் வரும் ஜூன் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் மைதானத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ திட்டமிடலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.