அடுத்த இரண்டு வருடத்திற்கு ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக டாட்டா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
2018 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் விவோ, ஐபிஎல் தொடருக்கு ஐந்து ஆண்டுகள் டைட்டில் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆண்டு ஒன்றுக்கு 440 கோடி ஐபிஎல் நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவிய சீன பொருள்களுக்கான தடையைத் தொடர்ந்து, தற்காலிகமாக விவோ நிறுவனம் ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து விலகியது. இதனால், ஓராண்டு நீட்டிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது.
கடந்த ஐபிஎல் தொடரில் ட்ரீம்-11 நிறுவனம் தற்காலிக டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. விவோ நிறுவனத்திற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மீதமிருக்க, சீனா மீதான அதிருப்தி இந்தியாவிற்கு இன்னும் இருப்பதால் ஒப்பந்தத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது.
ஜனவரி 11ஆம் தேதி ஐபிஎல் மற்றும் பிசிசிஐ மேல்மட்ட அதிகாரிகள் குழுவிற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் பேசுகையில், “விவோ நிறுவனம் தனது ஒப்பந்தத்தில் இருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டது. புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், புதிதாக ஐபிஎல் தொடரில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு அணிகள் குறித்தும் சில தகவல்களை வெளியிட்டார். அதில் குறிப்பாக, அகமதாபாத் நிறுவனம் சூதாட்டத்தில் ஈடுபடும் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் பிசிசிஐக்கு கிடைத்தது. இது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி அகமதாபாத் அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ தகவல் அனுப்பியிருந்தது.
இரண்டு மாதங்கள் முழு கண்காணிப்பிற்கு பிறகு, அகமதாபாத் அணி நிர்வாகம் சூதாட்ட நிறுவனத்துடன் இருக்கும் தொடர்பை விலக்கிக் கொள்வதாக தெரிவித்து விட்டதால், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்கலாம் என பிசிசிஐ ஒப்புதல் கொடுத்தது.
புதிய இரு அணிகளும் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்களை தக்கவைக்க கொடுக்கப்பட்ட கேடு முடிவுற்றது. ஆனால் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் மேலும் ஒரு வாரகாலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் இவ்விரு அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஐபிஎல் மெகா ஏலம் வருகிற பிப்ரவரி 11 மற்றும் 12-ம் தேதி பெங்களூருவில் நடக்க இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெ ஷா அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஜெ ஷா, புதிதாக டைட்டில் ஸ்பான்சராக ஐபிஎல் தொடரில் இணைந்திருக்கும் டாட்டா குழுமத்தை வரவேற்று பேசினார். 100 வருட பாரம்பரியத்தை இந்தியாவில் கொண்டிருக்கும் நிறுவனம் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக வந்திருப்பதில் ஐபிஎல் நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது என்றும் தனது வரவேற்பு பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.