நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று ஆக்லாந்து நகர் சென்றடைந்தது.
ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து, நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் இந்தியஅணி விளையாட உள்ளது. முதலாவது டி20 போட்டி வரும் 24-ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி 26-ம்தேதி ஆக்லாந்து நகரிலேயே நடக்கிறது.
29-ம் தேதி 3-வது போட்டி ஹேமில்டன் நகரிலும்,31-ம் தேதி 4-ம் போட்டி வெலிங்டனிலும், 5-வது மற்றும் கடைசிப் போட்டி டவுரங்கா நகரிலும் நடக்கிறது.
இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துக்கு நேற்று இரவு இந்தியாில் இருந்து புறப்பட்டு, இன்று ஆக்லாந்து சென்றடைந்தனர். இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகர் தவண் காயம் காரணமாக இந்திய அணியுடன் செல்லவில்லை.
ஆக்லாந்து சென்றபின், விராட் கோலி, சக அணி வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூருடன் புகைப்படம் எடுத்து ட்வி்ட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ” ஆக்லாந்து மண்ணை தொட்டுவிட்டோம், இனி போகலாம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நியூஸிலாந்து சென்றிருந்த இந்திய அணி டி20 தொடரை இழந்தது, ஆனால் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றித் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தியஅணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயோஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர்.