இந்திய வீரர்களின் தினப்படியை இரண்டு மடங்காக உயர்த்தியது பி.சி.சி.ஐ
விராட் கோலி தலைமையில் தொடர்ந்து இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை அங்கீகரிக்கும் விதமாக பிசிசிஐ நிர்வாகக் கமிட்டி வீரர்களின் அயல்நாட்டுத் தொடர் தினப்படியை இரட்டிப்பாக்க முடிவெடுட்துள்ளது.
மும்பை மிரர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் தற்போது அயல்நாட்டுத் தொடர் தினப்படியாக 125 டாலர்கள், அதாவது, ரூ.8,899.65 பெற்று வருகின்றனர், இது இனி 250 டாலர்களாக அதாவது ரூ.17,799 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிசினஸ் கிளாஸ் பயணம், தங்குமிடம், லாண்டரி செலவுகளையும் பிசிசிஐ வீரர்களுக்காக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை வென்ற துணைக்கண்ட அணி என்ற சாதனையை விராட் கோலி தலைமை இந்திய அணி நிகழ்த்தியது முதல் சமீபத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான இருதரப்பு மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2-0 என்று வென்று அசத்தி வருகிறது. தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு பெரும்பாலும் இந்தியாவில் ஆடும் இந்திய கிரிக்கெட் அணியினர் 2020 தொடக்கத்தில் நியூஸிலாந்து பயணிக்கின்றனர். அயல்நாட்டு வெற்றிகளில் தோனி, கங்குலி இருவரையும் கேப்டனாக விராட் கோலி கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.