ரிஷப் பன்ட்டை அணியில் இருந்து நீக்க முடிவெடுத்தது இவர்கள் தான்: கேப்டன் விராட் கோலி பதில்

டெஸ்ட் போட்டிகளில் அயல்நாட்டில் பயங்கரமான எதிரணி பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2 முக்கியச் சதங்களை எடுத்த ரிஷப் பந்த் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், பொதுவாக வெள்ளைப்பந்து கிரிக்கெட் நெருக்கடிகள் வேறு, டெஸ்ட் போட்டிகளுக்கான நெருக்கடி வேறு, இப்படியிருக்கும் போது குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் மோசமான ஷாட் தேர்வு சொதப்பல்கள் அவரை டெஸ்ட் அணியிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக இருக்கும் என்பதை நம்புவதற்கு சற்றுக் கடினமாகவே உள்ளது.

அதுவும் 22 மாதங்களுக்குப் பிறகு சஹாவை ‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’ என்று கோலி புகழாரம் சூட்டி அணியில் சேர்த்திருப்பது சரியாகத் தொனிக்கவில்லை, யாரைத் திருப்தி செய்ய அல்லது எதற்கு முன்னோட்டமாக பந்த் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மீண்டும் ஒரு இளம் வீரரின் தன்னம்பிக்கையை உடைத்து அவரது திறமைகளை மழுங்கச்செய்யும் ஒரு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை விராட் கோலி அண்ட் கம்பெனி எடுத்துள்ளனர்.

ஒரு காரணம் அது விராட் கோலி வெளிப்படையாகக் கூறாத காரணம் என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம். அதாவது சுத்த சுயம்பிரகாச விக்கெட் கீப்பர் சஹா என்கிறார் விராட் கோலி.

ஆகவே ரிஷப் பந்த்தின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பார்ம் அவரது டெஸ்ட் இடத்தைப் பறிக்கவில்லை என்பது விராட் கோலியின் நியாயப்பாடு உணர்த்தும் சூசகச் செய்தியாகும்.

இந்தியப் பிட்ச்கள் முதல் நாளிலிருந்தே குழிப்பிட்ச் ஆகி பந்துகள் தாறுமாறாகத் திரும்பும் போது அஸ்வின், ஜடேஜா போன்ற இந்திய பிட்ச் மாஸ்டர்களை ரிஷப் பந்த்தினால் சரிவர கீப் செய்ய முடியாது என்ற காரணத்தினால் சஹா தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது, ஆனால் இதையும் விராட் கோலி வெளிப்படையாகக் கூறவில்லை.

டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இத்தனை நாட்கள் துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக சகாவால் அணியில் இடம் பெற முடியவில்லை. உள்நாட்டு சூழல் சாஹாவுக்கு நன்கு ஒத்துழைக்கும் என நினைக்கிறேன்.

சாஹாவை அணிக்குள் மீண்டும் கொண்டுவர அணி நிர்வாகம் விரும்பியது. அவர்கள் தான் பன்ட்டை நீக்க முடிவு செய்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அழைத்துச் சென்றபோதிலும் அவரால் விளையாட முடியவில்லை.

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

Sathish Kumar:

This website uses cookies.