சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் கண்ட கருண் நாயர் இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படாமல் உட்கார வைக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தத் தொடரில் வலைப்பயிற்சியில் சக வீரர்களுக்கு த்ரோ செய்து பயிற்சியளிப்பது, குளிர்பானங்கள் கொண்டு வருவது என்று முடிந்து போனது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஆந்திரா வீரர் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் இவரது சராசரி 60. இவரது பெரும்பாலான ரன்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் கீழ்நிலையில் உள்ள அணிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரை விடவும் சிறப்பாகச் செயல்பட்ட கருண் நாயர் 5 டெஸ்ட் போட்டிகளிலும் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது:
அவர் இவர்களது ஃபேவரைட் வீரர் அல்ல, அணித்தேர்வுக்குழுவினர் அவரை இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்தனர். அதற்காக அணி நிர்வாகத்துக்கு அவரைப் பிடித்திருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள்.
தான் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்று அணி நிர்வாகத்தை நோக்கிக் கேட்கும் அனைத்து உரிமையும் கருண் நாயருக்கு உண்டு. அவருக்கு பதில் அளிப்பதுதான் முறை, பதிலுக்கு தகுதியானவர் தான் அவர்.
இதற்கு முன்னதாக கூடுதலாக ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மெனை அணியில் தேர்வு செய்யவில்லை, ஆனால் இப்போது எடுத்திருக்கிறீர்கள் (ஹனுமா விஹாரி) ஆனால் கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கவில்லை. நிச்சயம் கருண் நாயருக்கு அணி நிர்வாகம் பதில் அளித்தேயாக வேண்டும்.