12-வது ஐபிஎல் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகள் மட்டமே ப்ளே-ஆஃப் சுற்றை 16 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உறுதி செய்துள்ளன.
இன்னும் 2 இடங்கள் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றில் இருக்கிறது. அந்த இடத்துக்கு 5 அணிகள் போட்டாபோட்டி போடுகின்றன.
மும்பை இந்தியன்ஸ்.
ரோஹித் சர்மா தலையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருக்கிறது, 0.347 என்று நல்ல நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. இன்னும் மும்பை அணிக்கு இரு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், அதில் ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய இரு அணிகளும் வலிமையானவை என்பதால், எளிதாக வெற்றி கிடைக்காது. ஆனாலும் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்ல மும்பை அணிக்கு ஒரு வெற்றி இருந்தாலே போதுமானது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல அடுத்துவரும் 2 போட்டிகளையும் சன்ரைசர்ஸ் வெல்வது கட்டாயமாகும். ஒரு போட்டி மும்பை அணியுடனும், மற்றொரு போட்டி ஆர்சிபி அணியுடனும் இருக்கிறது. இதில் ஆர்சிபி அணியுடன் வென்றுவிடலாம். ஆனால் மும்பை அணியுடனான ஆட்டம் கடினமாக இருக்கும். சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்றால்கூட நிகர ரன்ரேட் அடிப்படையில் 0.709 சிறப்பாக இருப்பதால், ப்ளே-ஆப்சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு அடுத்துவரும் 2 போட்டிகளிலும் வெற்றி கட்டாயம். தற்போது 10 புள்ளிகளில் இருக்கும் கேகேஆர் அணி 14 புள்ளிகளுடனும், நல்ல ரன்ரேட் அடிப்படையிலும் வென்றால்மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. கேகேஆர் அணியைப் பொறுத்தவரை வாய்ப்பு மட்டுமே இருக்கிறதே தவிர 14 புள்ளிகள் பெற்றாலும் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்று ஊறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால், சன்ரைசர்ஸ், மும்பை அணிகளின் நிகர ரன்ரேட்டைக் காட்டிலும் கேகேஆர் ரன்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு மும்பை, பஞ்சாப் அணிகளை நல்ல ரன்ரேட்டில் தோற்கடித்தால் மட்டுமே வாய்ப்பு பற்றி பேச முடியும்.
கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி
அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் 2 போட்டிகளில் வென்று, ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் தோற்று, டெல்லி அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தினால், பஞ்சாப் அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு உண்டு.
இவ்வாறு நடந்தால், எந்த அணியும் 12 புள்ளிகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். ஆனால் ரன்ரேட்டில் தொடர்ந்து மைனஸில் பஞ்சாப் இருப்பது கவலைக்குரியதாகும். ராஜஸ்தான் அணி தோற்றால் மட்டும் பஞ்சாப் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதுமட்டாமல்லாமல் பஞ்சாப் அணி அடுத்து மோதும் இரு அணிகளான கேகேஆர், சிஎஸ்கே மிகவும் வலிமையானவே என்பதால் வெல்வது கடினமாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்வது கடினம்தான். அதுமட்டுமல்லாம், கேகேஆர் அணியும், பஞ்சாப் அணியும் தங்களின் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைய வேண்டும், டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் கண்டிப்பாக நல்ல ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுவாய்ப்பு இருக்கும்.