டெஸ்ட் தொடரை நடத்துவது சரியில்லை.. பிசிசிஐ தாண்டி ஐசிசியை சீண்டும் கேப்டன் கோஹ்லி!

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது சரியான முறையில் இல்லை என சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக இரு நாடுகளுக்கு இடையேயான தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆஷஸ் தொடரில் இருந்து துவங்கி நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய டெஸ்ட் அணி வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொண்டு அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளது.

இதனால், புள்ளிப்பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து மற்றும் இலங்கை தலா 60 புள்ளிகளுடன் 3வது மற்றும் 4வது இடத்திலும் உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று 2-0 என டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார் கேப்டன் விராட் கோலி.

அப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து தனது கருத்தை தெரிவித்தார். விராட் கோலி பேட்டி அளித்ததாவது:

” டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சில மாற்றங்களை கொண்டுவர நான் ஐசிசி இடம் கோரிக்கை விடுக்கிறேன். அதாவது ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் 2 டெஸ்ட் தொடர்களிலும் ஆடிய பிறகே புள்ளிகளை நிர்ணயிக்க வேண்டும்.

உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு கொடுக்கும் புள்ளிகளை விட இரட்டிப்பாக வெளியூர் மைதானங்களில் வெல்லும் அணிக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறை சமநிலை பெறும்.

இல்லையேல், இறுதிவரை அதிகமான உள்ளூர் போட்டிகளில் ஆடும் அணி ஆதிக்கம் செலுத்தி முன்னேறுவதை மட்டுமே நம்மால் காண இயலும். இது பார்வையாளர்களுக்கும் பெரிதான ஆர்வத்தை தூண்டாது” என்றார்.

விராட் கோலியின் இந்த கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இதற்கு ஐசிசி தொடர்ந்து மௌனம் காத்து வருவதே உண்மை.

Prabhu Soundar:

This website uses cookies.