டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் டாப் பொசிஷன் காலி? அச்சுறுத்தும் ஆஸி., அணி!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய அணியை நெருங்குகிறது ஆஸ்திரேலிய அணி.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் புதிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் டெஸ்ட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா 120 புள்ளிகளுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொண்டு 256 புள்ளிகள் பெற்றுள்ளது. சிட்னியில் நடக்க இருக்கும் கடைசி போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் 306 புள்ளிகள் பெற்றுவிடும். அப்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் 54 புள்ளிகள் மட்டுமே இடைவெளி இருக்கும்.
இந்தியா பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா வங்காளதேசம் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்தியா தொடரை இழக்கும் பட்சத்தில் முதல் இடத்தை இழந்து ஆஸி., முதலிடம் பிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் சூழல் ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது.