இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த ரிஷப் பண்ட், அஸ்வின் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நல்ல முன்னிலை கண்டுள்ளனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு டெஸ்ட் தரவரிசை பட்டியல் ஐசிசி தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கின்றனர். இருவரும் 7-வது இடத்தை பிடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ஹென்றி நிக்கோல் என்பவரும் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா 345 ரன்கள் அடித்திருந்தார். ரிஷப் பண்ட் 250 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். குறிப்பாக நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன் காரணமாக இருவரும் ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றனர்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து 5வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலை பொருத்தவரை, அஸ்வின் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தியதால் தற்போது தரவரிசை பட்டியலில் முன்னேறி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அதேபோல் பந்துவீச்சில் நான்கு போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்நாயகன் விருதையும் பெற்றதால், பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வருகிற மார்ச் 12ஆம் தேதி துவங்க இருப்பதால் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய டி20 அணியில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.