தோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுகிறார் என அந்நாட்டு அணி அறிவித்துள்ளது.
ஸ்டெயினுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பெருன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் அவர் அறிமுகமாகினார்.
களத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக டெலிவரி செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஸ்டெயின் இல்லாதது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு.
தற்போது ஸ்டெயினுக்கு 35 வயதாகிறது, ஏற்கெனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஸ்டெயின் சமீபத்தில்தான் விளையாட வந்தார். இப்போது மீண்டும் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், ஏறக்குறைய அவரின் கிரிக்கெட் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஐபிஎல்போட்டியில் பெங்களூரு அணியில் இடம் பெற்று ஒரு போட்டியில் மட்டும் பந்துவீசிய ஸ்டெயின் இதே தோள்பட்டை காயத்தால்தான் விலகினார்.
உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும்போதுகூட முழுமையாக உடல்தகுதி இல்லாமல்தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இருபோட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடையாததால், அவர் உலகக்கோப்பைத் தொடரில் இருந்தே விலகப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஸ்டெயின் இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறப்பு ஸ்டெயினுக்கு இருக்கிறது.
தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் இல்லாதது, இங்கிடி காயத்தால் விளையாடதது போன்றவை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது
ஸ்டெய்னுக்கு மாற்றாக தென்னாப்ரிக்க அணியில் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெகிடி, ரபாடா பந்துவீச்சு தென்னாப்ரிக்கா அணிக்கு பெரிதாக இதுவரை எடுபடவில்லை. நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஸ்டெயின் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளது அந்த அணிக்கு இழப்பாக பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள பல வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பல்வேறு அணிகளில் இணைந்து விளையாடியவர்கள் என்பதால் இந்திய வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு தெரியும். அதேபோல அவர்களின் பலம் பலவீனம் குறித்து இந்திய வீரர்களுக்கும் நன்கு தெரியும்.
தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சுழற்பந்தை வீச்சை சாமாளித்து ஆடுவதிலும், நெருக்கடி நேரத்தின் போதும் வழக்கம்போல் விக்கெட்டை பறிகொடுப்பார்கள். ஆதலால், தென் ஆப்பிரிக்க அணியை நெருக்கடியுடனே நகர்த்தி வருவது இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.