பும்ரா இல்லைன்னா இந்திய அணியே இல்லைன்னு பேசுனீங்க.. இப்போ சொல்லுங்க – முகமது ஷமி பேச்சு!

பும்ரா இல்லை என்பதற்காக, இந்திய அணி மோசமாக செயல்படும் என்கிற அர்த்தமில்லை என்று பேசியுள்ளார் முகமது சாமி.

சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீத் பும்ரா, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

ஆசியக்கோப்பை தொடருக்கு பின் காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ராவை டி20 உலகக்கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என்பதற்காக ஓரிரு நாட்களிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்தனர். துரதிஷ்டவசமாக உலகக்கோப்பைக்கு முன்பு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகினார்.

கடந்த டிசம்பர் மாதம் பும்ரா குணமடைந்து விட்டார் என்று பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமி தேர்வுக்குழுவினருக்கு அறிக்கை வெளியிட்டது. ஆகையால் இலங்கை அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், அடுத்த சில தினங்களிலேயே நீக்கப்பட்டார். ஏனெனில் ஏற்கனவே பும்ரா காயம் விஷயத்தில் அவசரம் காட்டியது பாதகமாக முடிந்து விட்டது. மீண்டும் அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காக தேர்வு குழுவினர் அவரது சேர்க்கையை பின் வாங்கினர்.

நியூசிலாந்து அணியுடன் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் அவர் இல்லை. ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்க்கப்படவில்லை.

முழுக்க முழுக்க இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஆசியக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைகளுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்கிற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் பும்ரா இந்திய அணியில் இல்லை என்றால் இந்திய அணி சற்று பின்னடைவாகவே காணப்படுகிறது. ஏனெனில் வேகப்பந்துவீச்சில் பும்ரா அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் அணியில் இல்லை என்கிற விமர்சனங்களும் வந்தன.

இதற்கு இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து அணியுடனான தொடர்களில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல பதிலடி கொடுத்தனர். நியூசிலாந்து அணியுடன் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்ற பிறகு பேசிய முகமது ஷமி பும்ராவை பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளார்.

ஷமி பேசியதாவது: இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை என்றால் அது நிச்சயம் வருத்தம் அளிக்கும். முன்னணி வீரர்கள் காயம் ஏற்பட்டு விட்டார்கள் என்பதற்காக போட்டிகள் நடக்காமல் இருக்காது. அவரை அணியில் மிஸ் செய்வோம். ஏனெனில் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்பினால் இந்திய அணி கூடுதல் பலத்துடன் இருக்கும்.

மீண்டும் பந்துவீச்சு பயிற்சிக்கு பும்ரா திரும்பிவிட்டார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன். பும்ரா அணியில் இல்லை என்பதற்காக இந்தியா மோசமாக செயல்படும் என்கிற அர்த்தம் கிடையாது. மற்ற சிறந்த வீரர்களும் இதே இந்திய அணியில் இருக்கிறார்கள்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.