கூல் கேப்டன் தோனியின் காதல் – கல்யாண வாழ்க்கை நெகிழ்ச்சி கதை!

கிரிக்கெட் பிடிக்காதவர்களையும் தனது பேட்டிங் ஸ்டைலால் ஈர்த்தவர் மகேந்திர சிங் தோனி. நம்மில் பெரும்பாலானோர்கள் நம்மைப் பற்றி யாராவது சின்னதாக ஏதாவது சொல்லிவிட்டால் கூட, பல நாட்களுக்கு அதை மறக்க முடியாமல் நிம்மதி இழந்து தவிப்போம். இன்னும் சிலர் அவர்களை பழிவாங்க, சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மாதிரியான சூழல்களில் நாம் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டியது தோனியைத் தான்.

தன்னை அளவுக் கடந்து புகழும் போதும், எல்லை மீறி விமர்ச்சிக்கும் போதும், அமைதியையும் புன்னகையையும் மட்டுமே அவர் பதிலாகத் தந்திருக்கிறார். ‘தோனிக்கு வயசாகிவிட்டது, இனி முன்பு போல் விளையாட முடியாது’ என எழுந்த விமர்சனத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் தான் கேப்டனாக இருந்த சென்னை சூப்பர் கிங் அணியை சிறப்பாக வழி நடத்தி சாப்பியன் கோப்பையை வென்றுக் கொடுத்தார். இப்படி இவரின் அதிரடி பதிலடிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி கடந்த சில தினங்களுக்கு முன்ன 4ம் தேதி தனது 8-வது திருமண நாளைக் கொண்டாடும் தோனியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வருவோம்.

தோனியும் அவரது மனைவி சாக்‌ஷியும் பள்ளியிலிருந்தே நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தார்கள். திரைப் படங்களில் வருவதைப் போலவே, கொஞ்ச நாட்களில் சாக்‌ஷியின் குடும்பம் ராஞ்சியிலிருந்து டேராடூனுக்கு இடம் பெயர்ந்தது. இதனால் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.

இதற்கிடையில் பிரியங்கா ஜா என்ற பெண்ணை காதலித்தார் தோனி. ஆனால் அந்தப் பெண் விபத்தில் இறந்துவிட அந்த துயரத்தில் இருந்து மீளவே தோனிக்கு வெகு நாட்களானது. இதனை தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘எம்.எஸ்.தோனி – அன்டோல்டு ஸ்டோரியிலும்’ காட்டியிருப்பார்கள். பிறகு, 2007 நவம்பர் – டிசம்பரில் நடந்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் தொடரின் போது கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலில் வைத்து மறுபடியும் சாக்‌ஷியை சந்தித்தார் தோனி. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருந்த சாக்‌ஷி அப்போது அந்த ஹோட்டலில் இன்டர்ன்ஷிப்பில் இருந்தார். அந்த நொடியிலேயே தோனியின் வாழ்க்கைக்குள் ரீ-என்ட்ரியாகிவிட்டார் சாக்‌ஷி.

மற்றவர்களைப் போல் திருமணத்திற்கு முன்பு இவர்களின் பெர்சனல் லைஃப் பொதுவெளிக்கு வரவில்லை. 2010, ஜூலை 4-ம் தேதி தோனி, தனது பள்ளி தோழி சாக்‌ஷியை மணந்திருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டது பி.சி.சி.ஐ. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக பல பெண்களின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.

அதன் பிறகு தோனி விளையாடும் போட்டிக்கு விஜயம் செய்வதை எழுதப் படாத விதியாக வைத்திருக்கிறார் சாக்‌ஷி. குறிப்பாக ஐ.பி.எல்-ல் சென்னை சூப்பர் கிங்சுக்காக அவர் விளையாடும் தருணங்களில் சாக்‌ஷியையே சில கேமராக்கள் ஃபோகஸ் செய்துக் கொண்டிருக்கும். மற்ற தம்பதியினரைப் போல் பொதுவெளியில் ரொமாண்டிக்காக இல்லாத இந்த தம்பதிக்கிடையே இருக்கும் புரிதல் அளப்பறியது. செல்ஃபி ஃப்ரீக்கான சாக்‌ஷி அவ்வப்போது தங்களின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இவர்களின் குழந்தை ஸிவா சமூக வலைதளங்களை வைரலாக்கும் க்யூட் டால். மேட்ச் இல்லாத நாட்களில் தனது ஓய்வு நேரத்தை தனது மகளுடனும், குடும்பத்தினருடனும் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தோனி.

சின்ன சின்ன விஷயங்களுக்கே சண்டையிட்டுக் கொள்பவர்களுக்கு மத்தியில், இந்தியாவை பெருமைப் படுத்த வேண்டிய பொறுப்பும், குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய கடமையையும் சிறப்பாக கையாள்கிறார் தோனி. புரிதலில்லா வாழ்க்கை பூஜ்ஜியத்தில் முடியும், புரிதலுடன் வாழ்ந்தால் பூமியே உங்களைக் கண்டு வியக்கும். தோனி – சாக்ஷி தம்பதியினரைப் போல்!

இனிய திருமண நாள் வாழ்த்துகள் கேப்டன் கூல்!

Editor:

This website uses cookies.