இந்தூர் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிய நிலையிலும் வங்கதேசத்தின் இடது கை ‘கட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தாவில் பகலிரவு, பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டிக்கு வங்கதேசம் தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
24 வயதுதான் முஸ்தபிசுர் ரஹ்மான் காயங்களுக்கு அதிகம் இலக்காகும் ஒரு பவுலராக இருந்து வருகிறார், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் சோபிக்கவில்லை.
வங்கதேச அணியின் கேப்டன் மோமினுல் ஹக் சனியன்று கூறும்போது, “ஈடன் டெஸ்ட் போட்டிக்கு முஸ்தபிசுர் ரஹ்மானைத் தேர்வு செய்வது குறித்துக் கூறுவது கடினம்” என்றார்..
ஒருநாள், டெஸ்ட் என்று கலக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், வங்கதேச அணி உள்நாட்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தியதில் பெரும்பங்காற்றினார், டெஸ்ட் போட்டிகளில் அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடிவந்தார், கடைசியாக நியூஸிலாந்துக்கு எதிராக மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.
இதற்கும் முன்பாக ஜிம்பாப்வே மற்றும் மே.இ.தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.
இந்நிலையில் அடிக்கடி காயமடைந்து வரும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்துக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. விராட் கோலி தலைமை இந்திய அணி. இதில் கேப்டனாக தோனியின் இன்னொரு சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 6வது தொடர் வெற்றியாகும் இது. மேலும் விராட் கோலி தலைமையில் இது 10வது டெஸ்ட் இன்னிங்ஸ் வெற்றியாகும். முன்னதாக முன்னாள் கேப்டன் தோனி 9 முறை அவரது தலைமையில் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். கோலி 10 என்று அதனை தற்போது கடந்து தோனியைப் பின்னுக்குத் தள்ளினார்.
மொகமது அசாருதீன் தலைமையில் 8 இன்னிங்ஸ் வெற்றிகளையும் கங்குலி தலைமையில் 7 இன்னிங்ஸ் வெற்றிகளையும் இந்திய அணி பெற்றுள்ளது.
ராகுல் திராவிட், கபில்தேவ், பாலி உம்ரிகர் தங்கள் தலைமையில் 2 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி அசைக்க முடியாத 300 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.