ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் உள்ளே வந்து விட்டால் இந்திய அணியே மொத்தமாக மாறிவிடும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. முதல் போட்டியை டெஸ்ட் தொடரில் வென்ற பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்திருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளி விடுகின்றனர்.
ஆல்ரவுண்டர் தாகூர் இரண்டு போட்டிகளிலும் நன்றாக விளையாடினர். அஸ்வின் இரண்டாவது போட்டியில் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் இருவரின் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ரோஷம் இல்லை. ஆகையால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இருவரும் அணிக்குள் வந்து விட்டால், இந்திய அணியின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிடும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
“ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஆல்ரவுண்டர்கள். பொக்கிஷம் என்றே கூறலாம். அவர்கள் வந்து விட்டால், இந்திய அணியின் அணுகுமுறை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.
ஹர்திக் பாண்டியா எளிதாக சிக்சர்கள் அடித்து ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தி விடுவார். 7வது இடத்தில் உள்ளே வரும் ஜடேஜா மிகவும் பயங்கரமான வீரராக இருக்கிறார். நாளுக்கு நாள் அவரது பேட்டிங் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.
சுழல் பந்து வீச்சில் சஹல், உலக கோப்பை வரை நன்றாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். இவர்களுடன் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இருப்பதால், சுழல் பந்துவீச்சு இன்னும் பலமாக தெரிகிறது. இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை இரண்டு போட்டிகளில் மிகவும் மந்தமானதாக இருந்தது. மிடில் ஓவர்களில் ஆக்ரோஷம் குறைந்து காணப்பட்டது. ஆகையால் பாண்டியா மற்றும் ஜடேஜா வந்துவிட்டால், இந்தக் குறை தெரியாது.” என்றார்.