ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் தன் பெயருக்கேற்ற நாளாக நேற்று கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் கடினமான நாளை அனுபவித்தார். டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து அணி 481 ரன்களைக் குவிக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்விக்குச் சமமான 242 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வி கண்டது.
அடின்னா அடி… 8 பவுலர்கள் வீசியும் பயனில்லை, மாயமான பந்துகள்:
ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்களுக்கும் பவுண்டரியில் அமர்ந்திருந்த இளம் வீரர்களுக்கும், வளரும் வீரர்களுக்கும் பால் பாய்களுக்கும் ஏகப்பட்ட வேலை. ஏனெனில் மொத்தம் 21 சிக்சர்கள் 41 பவுண்டரிகளை விளாசித்தள்ளியது இங்கிலாந்து.
முதலில் ஜேசன் ராய் 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் ஜேசன் ராய் 82 ரன்களை வெளுக்க அலெக்ஸ் ஹேல்ஸ் 92 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 147 ரன்கள் குவிக்க, ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 139 ரன்கள் விளாசினார். இயன் மோர்கன் தன் பங்குக்கு 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று கையை நனைக்க 67 ரன்களை விளாசி ஆஸி.யின் வெந்த புண்ணில் வேலை விட்டு ஆட்டினார்.
ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளை வெளுத்துக்கட்டினார் ஜேசன் ராய். இவரும் பேர்ஸ்டோவும் இணைந்து 19.3 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 159 ரன்களைச் சேர்த்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10வது சிறந்த தொடக்கக் கூட்டணி ரன்களாகும்.
500 ரன்கள் என்பது சர்வசாதாரணம் என்ற நிலையில் ஒருநாள் போட்டியில் கூட ஆஸி. இன்னிங்ஸ் தோல்வியடையுமா என்ற ஐயம் நமக்கு எழ ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தனர், ஜானி பேர்ஸ்டோ தனது கடந்த 6 ஒருநாள் இன்னிங்ஸ்களில் நேற்று எடுத்தது 4வது சதமாகும். மோர்கன் ஒரு காட்டடி பேட்ஸ்மென் அவர் உதவியுடன் ஸ்கோர் இந்த அளவுக்கு உயர்ந்தது.
தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது:
மிகவும் கடினமான நாள். கடந்த போட்டியில் 25வது ஓவரில் தலையில் அடி வாங்கினேன் அதனால் தலைவலிகள் ஏற்பட்டது, ஆனால் இப்போது வந்திருப்பது உண்மையான தலைவலி.
ஓய்வறையில் தெரிவித்தேன், நான் குழந்தைப்பருவம் முதல் கிரிக்கெட் ஆடுகிறேன், ஆனால் இப்படியொரு கடினமான நாளை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை.
நாங்கள் தொட்டது ஒன்று கூட துலங்கவில்லை, அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது. பொதுவாக சிறிது நேரத்துக்கு ஒரு அணியின் ஆதிக்கம் இருக்கும் 2 விக்கெட்டுகள் போனால் ஆட்டம் மாறும் இதுதான் வழக்கம், ஆனால் நேற்று ஆட்டம் முழுதுமே எங்களைப் போட்டுப் பார்த்து விட்டது.
ஆனால் இங்கிலாந்து அடித்த அடி முன்னெப்போதும் இல்லாதது. பிட்ச் எல்லாம் காரணமல்ல நாங்கள் எதையும் சரியாக செயல்படுத்தவில்லை.
அதுவும் அமைதியாக ஆடுவது முடியாத காரியம், அதுவும் மைதானம் முழுதும் பந்துகளை பேட்ஸ்மென்கள் தெறிக்க விடும்போது பவுலர்கள் அமைதிகாப்பது மிகவும் கடினம்.
இது மாதிரியான ஒரு அனுபவம் தேவை, இது வீரர்களுக்கு ஒரு பாசிட்டிவ் ஆற்றலைத் தரும் என்று நம்புகிறேன், கடினமான பாடங்கள்தான் வீரர்களை வலுப்பெறச்செய்யும்.
இவ்வாறு கூறினார் டிம் பெய்ன்.