இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்திற்கு ஐசிசி தரச் சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி துவங்கியது. இதில் முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை பொட்டலமாக்கினர்.
அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நன்றாக இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, 197 ரன்கள் வரை அடித்து, 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள், முதல் இன்னிங்சில் செய்த தவறுகளை மீண்டும் செய்து ஆட்டமிழந்தனர். புஜாரா அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். மேலும் அணியின் ஸ்கோர் 150 எட்டுவதற்கு உதவினார். இறுதியில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணியை விட 75 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் அதிகமாக அடிக்க முடிந்தது.
மூன்றாம் நாளில் வெறும் 1 விக்கெட் மட்டுமே இழந்து, 76 ரன்கள் இலக்கை சிக்கலின்றி ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்துவிட்டது. இந்த மூன்றாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, தொடரில் 1-2 என்ற நிலையிலும் இருக்கிறது.
இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு பிட்ச் மோசமாக இருந்தது தான் காரணம் என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு போட்டி முடிந்த பிறகு பதில் கொடுத்த ரோகித் சர்மா பேசுகையில்,
“பிட்ச் காரணம் என்று சொல்லுவது நியாயமற்றது. எதிரணி பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களின் சிறந்த செயல்பாட்டிற்கு கிடைத்த பரிசு இது. ஆகையால் வெறுமனே பிட்ச்சை குறை கூறுவது எந்த வகையிலும் சரியானதல்ல.” என்றார்.
அதேபோல் மூன்று நாட்களில் போட்டிகள் முடிந்துவிடுவதைப் பற்றி பலரும் விமர்சித்தனர். அதற்கு பதில் கொடுத்த ரோகித் சர்மா, “இது போன்ற போட்டிகள் தான் வரவேற்கப்படுகின்றன. பாகிஸ்தானில் ஐந்து நாட்கள் முழுவதும் போட்டி நடைபெற்றது. பலரும் வெறுப்படைந்து விட்டனர். மூன்று நாட்கள் நடைபெறும் போட்டி என்றாலும், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை என்பதால் ரசிகர்கள் நன்றாக விரும்பி பார்க்கின்றனர்.” என்றும் பேசினார். ஆனாலும் பிட்ச் குறித்த விமர்சனம் நிற்கவில்லை.
இதற்கிடையில் ரோகித் சர்மா, இந்தூர் பிட்ச் நன்றாக இருந்தது என பெருந்தன்மையாக கூறினாலும், அவர் சொன்னதற்கு அப்படியே தலைகீழாக, இந்தூர் மைதானத்திற்கு “தரமற்ற பிட்ச்” என்ற தரச்சான்றிதழை கொடுத்திருக்கிறது ஐசிசி.
“பந்து வழக்கத்தை விட அதிக அளவில் டர்ன் ஆனது. மைதானம், பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டுக்கும் சம அளவில் வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும். வெறுமனே பந்துவீச்சு அல்லது பேட்டிங் ஏதேனும் ஒருசார்பு உடையதாக இருந்தால், போட்டி எப்படி சமநிலை பெற்றதாக இருக்க முடியும்?. அதனால் இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.” என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது.