சிஎஸ்கே, மும்பை எல்லாம் ஒன்னுமே கிடையாது… இந்த டீமை கண்டால் தான் இப்போது எல்லாருக்கும் பயம் – முன்னாள் இந்திய வீரர் பேச்சு!

‘சிஎஸ்கே, மும்பை அணியெல்லாம் கிடையாது. கடைசி இரண்டு போட்டிகளில் ஆர்சிபி அணி விளையாடிய விதத்தைக்கண்டு பலரும் பயந்து போயிருக்கிறார்கள்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

11 போட்டிகளில் 10 புள்ளிகளை மட்டுமே பெற்று திணறிவந்த ஆர்சிபி அணி, மீதமிருக்கும் கடைசி மூன்று லீக் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.

இதில் முதல் இரண்டு லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளை எதிர்கொண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் 171 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி. பின்னர் பந்துவீச்சில் 59 ரன்களுக்குள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சுருட்டி, 112 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புள்ளி பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டது.

அதற்கு அடுத்ததாக, ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி  பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். டு பிளஸிஸ் இந்த சீசனின் 8ஆவது அரைசதம் அடித்தார்.

தனது கடைசி லீக் போட்டியை சொந்த மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி இருக்கிறது.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் மிகச்சிறந்த ஃபார்மிற்கு வந்திருக்கும் ஆர்சிபி அணியைக் கண்டு பல அணிகள் தற்போது அச்சத்தில் இருக்கின்றனர் என்கிறவாறு தனது கருத்தையும் முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

“தடுமாறி வந்த ஆர்சிபி அணி கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய விதத்திற்கு கண்டிப்பாக இப்போது ஆட்டத்தில் முன்னிலையில் இருக்கிறார்கள் என்றே கூறலாம். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது மட்டுமல்லாது சிறந்த ஆட்டத்தினால் மற்ற அணிகளையும் அச்சுறுத்திவிட்டார்கள்.

இப்போது இருக்கும் நிலையை வைத்துப் பார்க்கையில் குஜராத் அணியை தவிர எந்த அணியும் பிளே-ஆப் செல்லும் என கூறமுடியாது. சிஎஸ்கே மும்பை ஆகிய அணிகளை விட சிறப்பான ஆட்டத்தை ஆர்சிபி வெளிப்படுத்தினார்கள் என்று கருதுகிறேன். ஆர்சிபி அணிக்கு பேட்டிங் மட்டுமே பலம் என்று நினைத்திருந்தபோது பவுலிங்கில் 59 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும். இங்கு தான் ஆர்சிபி அணி பயத்தை காட்டியிருக்கும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.